அத்தியாயம் 19
யோபுவின் வார்த்தைகள்
1 யோபு மறுமொழியாக:
2 “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி,
வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
3 இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்;
நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
4 நான் தவறாக நடந்தது உண்மையானாலும்,
என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி,
எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,
6 தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன்,
கேட்பார் ஒருவரும் இல்லை;
கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
8 நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து,
என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு,
என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
10 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்,
நான் அற்றுப்போகிறேன்;
என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்;
என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து,
எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி,
என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.
13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்;
எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
14 என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள்.
என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
15 என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும்,
என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்;
அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.
16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்;
என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
17 என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;
என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.
18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்;
நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
19 என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்;
நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
20 என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
21 என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்,
எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
22 தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்?
என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?
23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,
24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும்,
ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
அவர் கடைசி நாளில் பூமியின்மேல்* 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
26 இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு,
நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
27 அவரை நானே பார்ப்பேன்;
வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;
இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
28 காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது,
நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
29 பட்டயத்திற்குப் பயப்படுங்கள்;
நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று,
கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.
*அத்தியாயம் 19:25 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21