அத்தியாயம் 29
1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2 “கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும்
எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது;
அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4 தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
5 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்;
என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்;
கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது;
அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7 நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய்,
வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்;
முதியோர் எழுந்து நிற்பார்கள்.
9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி,
கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10 பெரியோரின் சத்தம் அடங்கி,
அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11 என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது;
என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12 முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும்,
உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
13 அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
14 நீதியை அணிந்துகொண்டேன்;
அது என் ஆடையாயிருந்தது;
என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
15 நான் குருடனுக்குக் கண்ணும்,
சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
16 நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து,
நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17 நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து,
அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18 என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்;
என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
19 என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது;
என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
20 என் மகிமை என்னில் செழித்தோங்கி,
என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21 எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்;
என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22 என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்;
என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
23 மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து,
பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24 நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது,
அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
25 அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது,
நான் தலைவனாய் அமர்ந்து,
படைக்குள் ராஜாவைப்போலவும்,
துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.