21
யூதாவின் அரசன் மனாசே
1 மனாசே அரசனானபோது அவன் பன்னிரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். 2 இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய மக்களின் வெறுக்கத்தக்க பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். 3 தனது தகப்பனாகிய எசேக்கியா அழித்த வழிபாட்டு மேடைகளை இவன் திரும்பக் கட்டினான். அத்துடன் இஸ்ரயேல் அரசனான ஆகாப் செய்ததுபோல, பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டி, அசேரா விக்கிரக தூணையும் அமைத்தான். வானத்தின் எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விழுந்து வழிபட்டான். 4 யெகோவா எருசலேமில் என் பெயரை வைப்பேன் என்று கூறியிருந்த யெகோவாவின் ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். 5 யெகோவாவின் ஆலயத்திலுள்ள இரண்டு முற்றங்களிலும் வானத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 6 தன் சொந்த மகனையே நெருப்பில் பலியிட்டு, மந்திரவித்தை, பில்லிசூனியம் ஆகியவற்றைச் செய்து, ஜோசியக்காரரிடமும், குறிசொல்கிறவர்களிடமும் ஆலோசனை பெற்றான். யெகோவாவின் பார்வையில் அதிக தீமையானவற்றைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான்.
7 மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான். இந்த ஆலயத்தைப் பற்றியே யெகோவா தாவீதுக்கும் அவன் மகன் சாலொமோனுக்கும், “இஸ்ரயேலிலுள்ள எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், அதிலுள்ள இந்த ஆலயத்திலும் என்னுடைய பெயரை என்றென்றுமாக வைப்பேன் என்று சொல்லியிருந்தார். 8 என்னுடைய அடியவனாகிய மோசே இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அப்படி இருப்பீர்களானால் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டிலிருந்து திரும்பவும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்” என்றும் யெகோவா கூறியிருந்தார். 9 ஆனால் மக்களோ அதைக் கவனித்துக் கேட்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்யத்தக்கதாக மனாசே அவர்களை வழிதவறி நடக்கப்பண்ணினான்.
10 யெகோவா இறைவாக்கினரான தமது பணியாட்கள் மூலம் சொன்னதாவது: 11 “யூதாவின் அரசனாகிய மனாசே இந்த அருவருக்கத்தக்க பாவங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன் இருந்த எமோரியரைப் பார்க்கிலும் கூடுதலான கொடுமைகளைச் செய்து, தன்னுடைய விக்கிரகங்களினால் யூதாவைப் பாவத்துக்குள் வழிநடத்தினான். 12 ஆகையினால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளும் அதிரும்படியாக யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் ஒரு பெரிய அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று கூறுகிறார். 13 சமாரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அளவு நூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராய் பயன்படுத்தப்பட்ட தூக்கு நூலையும் நான் எருசலேமுக்கு மேலாகப் பிடிப்பேன். ஒருவன் ஒரு பாத்திரத்தைத் துடைத்து, அதைத் தலைகீழாக கவிழ்க்கிறதுபோல் நான் எருசலேமைத் துடைத்து அழித்துவிடுவேன். 14 நான் என் உரிமைச்சொத்திலிருந்து மீதியாயிருப்பவர்களை கைவிட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் தங்களுடைய பகைவர்கள் எல்லோராலும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்படுவார்கள். 15 ஏனெனில், அவர்களுடைய முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இன்றுவரை என்னுடைய பார்வையில் தீமையானவற்றையே செய்து எனக்குக் கோபமூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.”
16 மேலும் மனாசே எருசலேமை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் அதிக குற்றமில்லாத இரத்தம் சிந்தி நிரப்பினான். அத்துடன் யெகோவாவின் பார்வையில் தான் செய்த பாவத்தோடு, யூதாவையும் பாவம் செய்யப்பண்ணி அவர்களையும் தீமையானவற்றைச் செய்யப் பண்ணினான்.
17 மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பாவங்கள் உட்பட அவன் செய்த யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 18 மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் அரண்மனைத் தோட்டமாகிய ஊசாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகனான ஆமோன் அரசனானான்.
யூதாவின் அரசனான ஆமோன்
19 ஆமோன் அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் யோத்பா பட்டணத்தைச் சேர்ந்த ஆரூத்சின் மகள் மெசுல்லேமேத் என்பவள். 20 இவனும் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். 21 தன் தகப்பனுடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவன் வணங்கிய விக்கிரகங்களையே வணங்கினான். 22 தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை.
23 ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அரசனை அவனுடைய அரண்மனையில் கொலைசெய்தார்கள். 24 அதன்பின் அந்த நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராகச் சதிசெய்த எல்லோரையும் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அவனுடைய மகன் யோசியாவை அரசனாக்கினார்கள்.
25 ஆமோனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 26 இவன் ஊசாவின் தோட்டத்தில் தன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோசியா அரசனானான்.