35
ஓய்வுநாளின் விதிமுறைகள்
1 பின்பு மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் கூடிவரச்செய்து அவர்களிடம், “நீங்கள் செய்யவேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டவைகள் இவையே: 2 நீங்கள் ஆறு நாட்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாள். அது யெகோவாவுக்கான ஓய்வுநாள். அந்த நாளிலே வேலைசெய்பவன் எவனும் கொலைசெய்யப்படுவான். 3 ஓய்வுநாளில் நீங்கள் வசிக்கும் எந்தக் குடியிருப்புகளிலும் நெருப்பு மூட்டக்கூடாது” என்றான்.
இறைசமுகக் கூடாரத்திற்கான பொருட்கள்
4 பின்னும் மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்திடமும், யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: 5 உங்களிடம் இருப்பதிலிருந்து யெகோவாவுக்காக ஒரு காணிக்கையை எடுங்கள். யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர விரும்பும் ஒவ்வொருவனும் கொண்டுவர வேண்டியதாவன:
“தங்கம், வெள்ளி, வெண்கலம்,
6 நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல்; மென்பட்டுத் துணி,
வெள்ளாட்டு உரோமம்,
7 சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்,
சித்தீம் மரம்,
8 வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்,
அபிஷேக எண்ணெய்க்கும், நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
9 ஏபோத்திலும், மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.”
10 உங்களில் தொழில் திறமையுள்ளவர்கள் எல்லோரும் வந்து, யெகோவா கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் செய்யவேண்டும்.
11 “அவையாவன: இறைசமுகக் கூடாரமும் அதற்குரிய மூடுதிரையும், கொக்கிகளும், மரச்சட்டங்களும், குறுக்குச் சட்டங்களும், கம்பங்களுடன் அதன் அடித்தளங்களும்,
12 அத்துடன் சாட்சிப்பெட்டி, அதற்குரிய கம்புகள், கிருபாசனம், சாட்சிப்பெட்டியை மறைக்கும் திரை,
13 மேஜை, அதற்குரிய கம்புகள், மேஜைக்குரிய பொருட்கள், இறைசமுக அப்பம்,
14 வெளிச்சத்திற்கான குத்துவிளக்கு, அதற்குரிய உபகரணங்கள், விளக்குகள், வெளிச்சத்திற்கான எண்ணெய்,
15 தூபபீடம், அதற்குரிய கம்புகள், அபிஷேக எண்ணெய், நறுமணத் தூபம்,
இறைசமுகக் கூடார நுழைவு வாசலுக்கான திரைச்சீலை,
16 தகன பலிபீடம், அதற்குரிய வெண்கலச் சல்லடை, அதற்குரிய கம்புகள், அதற்குரிய எல்லா பாத்திரங்கள்,
வெண்கலத் தொட்டி, அதற்குரிய கால்,
17 முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
18 இறைசமுகக் கூடாரத்திற்கும், முற்றத்திற்கும் வேண்டிய கூடார முளைகள், அதற்குரிய கயிறுகள்,
19 பரிசுத்த இடத்தின் ஆசாரியப் பணிசெய்ய உடுத்தப்படும் நெய்யப்பட்ட உடைகள், ஆசாரியனாகிய ஆரோனுக்கு வேண்டிய பரிசுத்த உடைகள், அவனுடைய மகன்கள் ஆசாரியராகப் பணிசெய்யும்போது அவர்களுக்கு வேண்டிய உடைகள் ஆகியனவாகும்.”
20 அதன்பின் முழு இஸ்ரயேல் சமுதாயமும் மோசேயின் முன்னின்று விலகிப்போனது. 21 அவர்களில் விருப்பமுடையவர்களும், இருதயத்தில் ஏவப்பட்டவர்களும், சபைக்கூடார வேலைக்கும் அதன் எல்லா பணிகளுக்கும், பரிசுத்த உடைகளுக்கும் வேண்டிய காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள். 22 விருப்பமுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ஒரேவிதமாகவே உடையலங்கார ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆபரணங்கள் முதலிய எல்லாவித தங்க நகைகளையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமது தங்கத்தை யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். 23 அத்துடன் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி, வெள்ளாட்டு உரோமம், சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடா தோல், கடல்பசுத் தோல் ஆகியவற்றையும் கொண்டுவந்தார்கள். 24 வெள்ளியையும், வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொடுக்க விரும்பியவர்கள் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மற்றெந்த வேலைகளுக்கும் பயன்படக்கூடிய சித்தீம் மரத்தை வைத்திருந்தவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள். 25 திறமையுள்ள பெண்கள் தங்கள் கைகளினால் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களையும், மென்பட்டுத் துணிகளையும் திரித்துக் கொண்டுவந்தார்கள். 26 திறமையுள்ள ஊக்கமான பெண்கள் யாவரும் வெள்ளாட்டு உரோமத்தையும் திரித்தார்கள். 27 மக்களின் தலைவர்கள் ஏபோத்திற்கும், மார்பு அணிக்கும் பதிப்பதற்கான கோமேதகக் கற்களையும், இரத்தினக் கற்களையும் கொண்டுவந்தார்கள். 28 அவர்கள் வெளிச்சத்திற்கும், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமணத்தூளுக்கும் தேவையான ஒலிவ எண்ணெயையும், வாசனைப் பொருட்களையும் கொண்டுவந்தார்கள். 29 யெகோவா மோசே மூலமாக அவர்கள் செய்யும்படி கட்டளையிட்ட எல்லா விதமான வேலைகளுக்காகவும் மனதில் விருப்பமுள்ள எல்லா இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும் சுயவிருப்பக் காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள்.
பெசலெயேலும் அகோலியாபும்
30 பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது: “பாருங்கள், யெகோவா யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்தெடுத்திருக்கிறார். 31 அவர் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பி, எல்லா வகையான வேலைகளையும் செய்யக்கூடிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். 32 தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், 33 இரத்தினக் கற்களை வெட்டவும், அவற்றைப் பதிக்கவும், மரத்தைச் செதுக்கி வெவ்வேறு வினோதமான வேலைகளைச் செய்யவும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். 34 அவனுக்கும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபுக்கும் மற்றவர்களுக்குப் போதிக்கும் ஆற்றலைக் கொடுத்தார். 35 அவர்களுடைய கைவினைஞர்களும், சித்திரக்காரர்களும் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அழகான தையல் வேலைகளைச் செய்யக்கூடியவர்களாகவும், நெசவாளர்களாகவும் ஆகும்படி அவர்களை ஆற்றலினால் நிரப்பினார். அவர்கள் தலைச்சிறந்த கைவினைஞரும், சித்திரக்காரருமாய் இருந்தார்கள்.