16
எருசலேமின் விபசாரம்
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2 “மனுபுத்திரனே, எருசலேமின் அருவருக்கத்தக்க பழக்கங்களைவிட்டு நீ அவளை எதிர்த்து, 3 அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா எருசலேமுக்குக் கூறுவது இதுவே, உன் வம்சமும் பிறப்பும் கானானியரின் நாட்டிலேயே இருந்தன. உன் தகப்பன் எமோரியன், தாயோ ஏத்திய பெண். 4 நீ பிறந்த நாளிலே உன் தொப்புள்கொடி அறுக்கப்படவில்லை. நீ சுத்தமடைவதற்காகத் தண்ணீரினால் கழுவப்படவுமில்லை. நீ உப்பினால் சுத்தமாக்கப்படவுமில்லை. துணியினால் சுற்றப்படவுமில்லை. 5 எவரேனும் உனக்காக இரங்கி, கருணைகாட்டி இவற்றில் எதையுமே உனக்குச் செய்யவுமில்லை. மாறாக நீ பிறந்த நாளிலேயே, வேண்டப்படாமல் வெறுக்கப்பட்டு திறந்த வயலிலே எறிந்து விடப்பட்டாய்.
6 “ ‘அப்பொழுது நான் அவ்வழியாய்ப் போனபோது, நீ கைகால்களை உதறிக்கொண்டு உன் இரத்தத்திலே கிடப்பதைக் கண்டேன். அவ்வாறு இரத்தத்தில் கிடந்த உன்னிடம், “பிழைத்திரு!” என்று சொன்னேன். 7 வயலின் பயிர்களைப்போல நான் உன்னை வளரச்செய்தேன். நீ வளர்ந்து பெரியவளாகி, அழகிய மங்கையானாய். உனக்கு மார்பகங்கள் உருவாயின, உன் கூந்தலும் வளர்ந்தது, ஆயினும் நீ நிர்வாணமும் உடையற்றவளுமாக இருந்தாய்.
8 “ ‘பின்பு நான் அவ்வழியாய் போகையில், உன்னைப் பார்த்தபோது நீ காதலிக்கத்தக்க பருவம் உள்ளவளாய் இருந்ததைக் கண்டேன். எனவே நான் என் உடையை ஓரத்தை உன்மீது விரித்து, உன் நிர்வாணத்தை மூடினேன். நான் உனக்கு மனப்பூர்வமாய் ஆணையிட்டு உன்னுடன் உடன்படிக்கையும் செய்தேன். நீ என்னுடையவளானாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
9 “ ‘பின்பு நான் உன்னை தண்ணீரினால் குளிப்பாட்டி, உன்னிலிருந்த இரத்தத்தைக் கழுவி, நறுமண தைலங்களைப் பூசினேன். 10 அலங்கரிக்கப்பட்ட உடையை உனக்கு உடுத்தி, தோல் செருப்புக்களையும் அணிவித்தேன். மென்பட்டு உடையை உனக்கு உடுத்தி, விலை உயர்ந்த உடைகளால் உன்னை மூடினேன். 11 நகைளால் உன்னை அலங்கரித்தேன். உன் கைகளில் வளையல்களைப் போட்டேன். உன் கழுத்திலே சங்கிலியையும் கட்டினேன், 12 உன் மூக்கில் மூக்குத்தியையும், காதுகளில் காதணிகளையும் போட்டு, உன் தலையில் அழகிய கிரீடத்தையும் அணிவித்தேன். 13 இவ்விதமாய் நீ தங்கத்தினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்டாய். உன் உடைகள் மென்பட்டும், விலை உயர்ந்ததும், அலங்கரிக்கப்பட்டதுமாய் இருந்தன. சிறந்த மாவும், தேனும், ஒலிவ எண்ணெயும் உனது உணவுகளாயிருந்தன. நீ பேரழகியாகி ஒரு அரசியாக உயர்வடைந்தாய். 14 உன் அழகினிமித்தம் உன் புகழ் பல தேசத்தார் மத்தியிலும் பரவிற்று. ஏனெனில் நான் உனக்கு அளித்த மகிமை, உன் அழகைப் பூரணப்படுத்தின என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15 “ ‘ஆனால் நீயோ, உன் அழகில் நம்பிக்கை வைத்து, விபசாரியாவதற்கே உன் புகழை பயன்படுத்தினாய். உன்னைக் கடந்துசென்ற ஒவ்வொருவனோடும் நீ விபசாரத்தில் ஈடுபட்டபடியால், உன் அழகு அவனுடையதாயிற்று. 16 உனது உடைகளில் சிலவற்றை நீ எடுத்து நீ விபசாரம் செய்த மேடைகளை அலங்காரம் செய்தாய். அத்தகைய காரியங்கள் நடந்ததுமில்லை; இனி ஒருபோதும் நடப்பதுமில்லை. 17 நான் உனக்குக் கொடுத்த என் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட நகைகளையும் நீ எடுத்து, உனக்கு ஆண் விக்கிரகங்களை உண்டுபண்ணினாய். அவைகளை வணங்குவதனால் விபசாரம் செய்தாய். 18 அவைகளின்மேல் போடுவதற்காக, அலங்கரிக்கப்பட்ட உன் உடைகளையும் நீ எடுத்தாய். எனக்குரிய எண்ணெயையும், தூபவர்க்கத்தையும் அவைகளுக்கு முன் காணிக்கை. 19 அதோடு நான் உனக்கு உணவாகக் கொடுத்த சிறந்த மாவையும், ஒலிவ எண்ணெயையும், தேனையும் நீயோ அவைகளுக்கு முன் நறுமண காணிக்கையாகக் கொடுத்தாய். நடந்தது இதுவே என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
20 “ ‘மேலும் நீ எனக்குப் பெற்ற மகன்களையும் மகள்களையும் விக்கிரகங்களுக்கு இரையாகப் பலியிட்டாய். நீ செய்த விபசாரம் போதாதோ? 21 என் பிள்ளைகளை நீ கொலைசெய்து, அவர்களை விக்கிரகங்களுக்குப் பலியிட்டாய். 22 வெறுக்கத்தக்க காரியங்கள் எல்லாவற்றிலும், உனது விபசாரத்திலும் நீ ஈடுபட்டிருக்கும்போது உனது இளவயதின் நாட்களை நீ நினைக்கவில்லை. அந்நாட்களில் நீ நிர்வாணமும் வெறுமையுமாய் கைகால்களை உதறியபடி உன் இரத்தத்தில் கிடந்தாயே!
23 “ ‘உனக்கு ஐயோ கேடு! உனக்குக் கேடு என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நீ செய்த கொடுமைகள் எல்லாவற்றுடனும் 24 உனக்கு மேடைகளை அமைத்து, ஒவ்வொரு பொதுசந்தியிலும் சிறு கோயில்களையும் அமைத்துக்கொண்டாய். 25 தெரு முனைகள் ஒவ்வொன்றிலும் நீ உனக்குக் கம்பீரமான சிறு கோயில்களை உண்டுபண்ணி, உன் அழகைக் கெடுத்தாய். உன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் உடலைக் கொடுத்து, உன் விபசாரத்தை அதிகரித்தாய். 26 இச்சைமிகுந்த அயலவரான எகிப்தியருடன் நீ விபசாரம் செய்தாய். எனக்குக் கோபமூட்டுவதற்காக உன் விபசாரத்தை மிகவும் அதிகமாகச் செய்தாய். 27 ஆதலால் இதோ, நான் என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, நாட்டில் உனக்குரிய எல்லையை சிறிதாக்கினேன். நான் உன்னை உனது பகைவர்களான, பெலிஸ்தியரின் மகள்களின் பேராசைக்கு ஒப்புக்கொடுத்தேன். அவர்களுங்கூட உன் கீழ்த்தரமான நடத்தையினிமித்தம் அதிர்ச்சியுற்றார்கள். 28 நீ இன்னும் திருப்தியடையாமல், அசீரியரோடும் விபசாரத்தில் ஈடுபட்டாய். அதற்குப் பின்னரும் நீ திருப்தியடையவில்லை. 29 வியாபாரிகளின் நாடாகிய பாபிலோனிலும் நீ உன் விபசாரத்தை விரிவுபடுத்தினாய். ஆனால் அதிலுங்கூட நீ திருப்தியடையவில்லை.
30 “ ‘வெட்கங்கெட்ட விபசாரியைப்போல, இக்காரியங்களையெல்லாம் நடப்பித்த நீ எவ்வளவு மனவுறுதியற்றவள் என்று யெகோவா அறிவிக்கிறார். 31 தெரு முனைகள் ஒவ்வொன்றிலும் நீ உனக்கு மேடைகளை உண்டுபண்ணி, பொது இடம் ஒவ்வொன்றிலும் எடுப்பான சிறு கோயில்களை அமைத்துக்கொண்டாய். ஆனாலும் நீ ஒரு சாதாரண விபசாரியைப்போல் நடந்துகொள்ளவில்லை, நீ பணமும் வாங்கவில்லை.
32 “ ‘ஆனால், நீயோ ஒரு விபசார மனைவி. உன் சொந்தக் கணவனைவிட பிறரையே விரும்புகிறாய். 33 எல்லா விபசாரிகளும் பணம் வாங்குவார்கள். ஆனால் உன் காதலர்களுக்கெல்லாம் நீயே நன்கொடைகளைக் கொடுத்து, சகல திசைகளிலுமிருந்து விபசாரத்துக்காக அவர்களை உன்னிடம் வரும்படி அழைத்தாய்; அவர்களுக்கு நீ இலஞ்சம் கொடுக்கிறாய். 34 இவ்விதமாய் விபசாரம் செய்வதில் மற்ற விபசாரிகளைப் பார்க்கிலும் நீ வேறுபட்டவளாக இருக்கிறாய். ஏனெனில் ஒருவரும் உன் தயவுக்காக உன்னைத் தேடிவருவதுமில்லை, உனக்குப் பணம் கொடுப்பதுமில்லை. நீயே அவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய். ஆதலால் நீ வேறுபட்டவள் தான்.
35 “ ‘ஆகையால் விபசாரியே! யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள். 36 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ உன் செல்வத்தைக் கொட்டி, உன் காதலர்களோடு விபசாரத்தில் ஈடுபட்டு, உன் நிர்வாணத்தை வெளிப்படுத்தினாய். வெறுக்கத்தக்க விக்கிரகங்களை நீ வழிபட்டாய். அவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைக் கொடுத்தாய். 37 அதனால் நீ மகிழ்ந்திருந்த உன் காதலர்கள் அனைவரையும், நீ நேசித்தவர்களையும், அவர்களோடு உன்னால் வெறுக்கப்பட்டவர்களாயும், நான் கூடிவரச் செய்வேன். நான் அவர்களை ஒவ்வொரு திசையிலிருந்தும் உனக்கெதிராகக் கொண்டுவந்து, உன் உடைகளை அவர்களுக்கு முன்பாக அகற்றிவிடுவேன். அவர்கள் உன் நிர்வாணத்தைக் காண்பார்கள். 38 விபசாரம் செய்து, இரத்தம் சிந்தும் பெண்களுக்குரிய தண்டனையை உனக்கு நான் வழங்குவேன். என் கோபத்தோடும், எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்மீது சுமத்துவேன். 39 பின்பு நான் உன்னை உன் காதலர் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன் மேடைகளைத் தகர்த்து, உன் சிறு கோயில்களை இடித்துவிடுவார்கள். உன் உடைகளை உரிந்து, உன் அழகிய நகைகளையும் எடுத்துக்கொண்டு, உன்னை நிர்வாணமாயும், வெறுமையாயும் விட்டுச்செல்வார்கள். 40 அவர்கள் உனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, தங்கள் வாள்களினால் உன்னைத் துண்டுதுண்டாக வெட்டுவார்கள். 41 உன் தீயினால் எரித்து, அநேக பெண்களுக்கு முன்பாக உன்னைத் தண்டிப்பார்கள். இப்படி உன் விபசாரத்திற்கு நான் ஒரு முடிவுகட்டுவேன். அதன்பின் நீ உன் காதலர் யாருக்குமே பணம் கொடுக்கமாட்டாய். 42 அப்பொழுது உனக்கெதிரான எனது கடுங்கோபம் தணியும். என் எரிச்சல் உன்னைவிட்டு நீங்கும். அதன்பின் நான் கோபமாயிராமல் அமைதியாயிருப்பேன்.
43 “ ‘நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல் இவை எல்லாவற்றினாலும் எனக்குக் கோபமூட்டினாய். அதன் நிமித்தம் நிச்சயமாய் நான் உன் நடத்தையின் பலனை உனது தலையிலே விழப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். உன் எல்லா அருவருப்பான பழக்கங்களோடு இழிவான செயல்களையும் நீ செய்யவில்லையோ?
44 “ ‘பழமொழி சொல்லும் ஒவ்வொருவனும்: “தாயைப்போலவே மகளும் இருப்பாள், என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்வான்.” 45 நீயோ, தன் கணவனையும், தன் பிள்ளைகளையும் வெறுத்த உன் தாய்க்கு உண்மையான மகள். நீ தங்கள் கணவர்களையும் தங்கள் பிள்ளைகளையும் வெறுத்த உன் சகோதரிகளுக்கு உண்மைச் சகோதரியுமாய் இருக்கிறாய். உன் தாயோ ஏத்திய பெண். உன் தந்தையோ எமோரியன். 46 உன் வடபுறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சமாரியா உன் அக்காள். உன் தென்புறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சோதோம் உன் தங்கை. 47 நீ அவர்களுடைய இழிவான செயல்களைப் பின்பற்றி, அவர்களுடைய வழியில் நடந்ததுமன்றி, உன் எல்லா வழிகளிலும் அவர்களைவிடவும் மோசமாக நீ நடந்தாய். 48 யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன் மகள்களும் செய்ததை, உனது சகோதரியாகிய சோதோமும், அவள் மகள்களுங்கூட செய்யவில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
49 “ ‘உன் சகோதரியாகிய சோதோமின் பாவம் இதுவே: அவளும் அவள் மகள்களும் அகந்தையுள்ளவர்களும் மிதமிஞ்சி சாப்பிட்டு, இரக்கம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் உதவிசெய்யவில்லை. 50 அவர்கள் அகந்தைகொண்டு எனக்கு முன்பாக அருவருப்பான செயல்களைச் செய்தார்கள். ஆகையால் நான் அவர்களை அழித்தேன். நீ அதைக் கண்டாய். 51 நீ செய்த பாவங்களில் பாதியையேனும் சமாரியா செய்யவில்லை. அவர்கள் அருவருப்பான செயல்களை நீ செய்தாய். நீ செய்த இவை எல்லாவற்றினாலும் உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தாய். 52 உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காண்பிப்பதற்கு உன் செயல்கள் இடமளித்துள்ளதால், உன் அவமானத்தை நீயே சுமந்துகொள். ஏனெனில், உனது பாவங்கள் அவர்களின் பாவங்களைவிட மிகவும் கேவலமானவை. அவர்களோ உன்னைப் பார்க்கிலும் நீதியுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆகவே நீ உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தபடியால், நீ வெட்கப்பட்டு உன் அவமானத்தை சுமந்துகொள்.
53 “ ‘ஆயினும், ஒரு நாள் நான் சோதோம் மற்றும் அவளுடைய மகள்களுக்கும், சமாரியா மற்றும் அவளுடைய மகள்களுக்கும் செல்வச் சிறப்பைத் திரும்பவும் கொடுப்பேன். அதோடு உனது செல்வச் சிறப்பையும் நான் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். 54 இதனால், அப்பொழுது நீ உன் சகோதரிகளை ஆறுதலடையப் பண்ணின, உன் செயல்கள் காரணமாக உன் அவமானத்தைச் சுமந்து வெட்கமடைவாய். 55 உன் சகோதரிகளான சோதோமும் சமாரியாவும் அவர்களுடைய மகள்களுடன் தங்களுடைய முந்திய நிலைக்குத் திரும்புவார்கள். நீயும் உன் மகள்களும் முந்திய நிலைக்குத் திரும்புவீர்கள். 56 நீ மேட்டிமைகொண்டிருந்த நாளில், உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உச்சரிக்கக்கூட நீ விரும்பவில்லை. 57 அவ்வேளையில் உன் கொடுமைகள் வெளியரங்கமாகவில்லை. அவ்வாறிருந்தும், இப்பொழுதோ நீ ஏதோமின் மகள்களாலும் அவளுடைய அயலாராலும், பெலிஸ்தியரின் மகள்களாலும் கேலி செய்யப்படுகிறாய். உன்னைச்சூழ இருக்கிறவர்கள் உன்னை அவமதிக்கிறார்கள். 58 நீ உன் இழிவானதையும், உன் அருவருப்புகளையும் சுமப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார்.
59 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீ என் உடன்படிக்கையை முறித்து என் ஆணையை அசட்டை செய்தபடியினால், அதற்குத் தக்கவாறே நானும் உனக்குச் செய்வேன். 60 இருப்பினும் நான் உன் வாலிப நாட்களில் உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நான் உன்னுடன் ஒரு புது உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். அது நித்தியமானது. 61 உனக்கு தமக்கையும் தங்கையுமாகிய உனது சகோதரிகளை நீ ஏற்றுக்கொள்ளும்போது, உன் நடத்தைகளை எண்ணி வெட்கமடைவாய். நான் அவர்களை உனக்கு மகள்களாகக் கொடுப்பேன். ஆனால் நான் ஏற்கெனவே உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி அல்ல. 62 நான் உன்னோடு புது உடன்படிக்கையைச் செய்வேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய். 63 மேலும் நீ செய்த அனைத்திற்காகவும் நான் உனக்காக பாவநிவிர்த்தி செய்யும்போது, நீ அதை நினைவுகூர்ந்து வெட்கமடைவாய். நீ அவமானப்படுத்தப்பட்டதனால், இனியொருபோதும் உன் வாயைத் திறக்கமாட்டாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றார்.’ ”