6
தரியு அரசனின் ஆணை
தரியு அரசனின் உத்தரவின்படி பாபிலோனிலுள்ள களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டுச் சுவடிகளை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். மேதியா நாட்டில் அக்மேதா என்னும் அரச அரண்மனையில் ஒரு பிரதி கண்டெடுக்கப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
ஞாபகக் குறிப்பு:
கோரேஸின் முதலாம் வருட அரசாட்சியில், அரசன் எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்தைக்குறித்துப் பிறப்பித்த கட்டளையாவது:
 
எருசலேமில் பலிகளைச் செலுத்தும் ஒரு இடமாக ஆலயம் திரும்பக் கட்டப்படட்டும். அதற்கு அஸ்திபாரம் போடப்படட்டும். அதன் உயரம் அறுபது முழமும், அகலம் அறுபது முழமுமாயிருக்க வேண்டும். அது மூன்று வரிசை பெரிய கற்களினாலும், ஒரு வரிசை மரத்தினாலும் கட்டப்பட வேண்டும். அதன் செலவுகளெல்லாம் அரச திரவிய களஞ்சியத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும். அத்துடன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த இறைவனின் ஆலயத்துக்குரிய தங்க, வெள்ளிப் பொருட்கள் திரும்பவும் அதற்குரிய இடமான எருசலேம் ஆலயத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அவை இறைவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட வேண்டும் என எழுதியிருந்தது.
 
ஆகவே அரசன் தரியு இந்தச் செய்தியை அனுப்பினான், ஐபிராத்து நதியின் மறுகரையில் ஆளுநராய் இருக்கின்ற தக்னா ஆகிய நீயும், சேத்தார்பொஸ்னாய் ஆகிய நீயும், அந்த மாகாணத்தில் அதிகாரிகளாயிருக்கிற உங்களுடைய நண்பர்களுமான நீங்களும் அங்கிருந்து விலகியிருங்கள். இறைவனின் ஆலயத்தில் நடக்கும் இந்த வேலையில் தலையிட வேண்டாம். யூதரின் ஆளுநனும், யூதரின் முதியவர்களும் இறைவனின் ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டட்டும்.
மேலும் எனது ஆணையாவது: இறைவனுடைய ஆலயத்தின் கட்டட வேலையில் யூதர்களின் முதியவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதை நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருந்து பெறப்படுகின்ற வரிப்பணத்தை அரச திரவிய களஞ்சியத்திலிருந்து, இந்த வேலை நின்றுபோகாதபடி முழுவதையும் அந்த மனிதர்களின் செலவுகளுக்குக் கொடுக்கவேண்டும். அத்துடன் எருசலேமில் இருக்கின்ற ஆசாரியர்கள் கேட்கின்றபடி, பரலோகத்தின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளுக்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவை எதுவானாலும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கப்படவேண்டும். 10 அவர்கள் பரலோகத்தின் இறைவனை மகிழ்விக்கும்படி இந்த பலிகளைச் செலுத்தி, அரசனுடைய நலனுக்காகவும், அவனுடைய மகன்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டுதல் செய்யும்படி இப்படிச் செய்யவேண்டும்.
11 மேலும், இதையும் நான் உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை யாராவது மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு வளை மரம் களற்றப்பட்டு, அவன் அதில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும். இந்த குற்றத்திற்காக அவனுடைய வீடு இடிபாடுகளின் குவியலாக ஆக்கப்பட வேண்டும். 12 இக்கட்டளையை மாற்றி, எருசலேமில் உள்ள ஆலயத்தை அழிக்கும்படி, தன் கையை உயர்த்துகிற எந்த அரசனையும், மனிதனையும் தனது பெயரை அங்கு நிலைநிறுத்திய இறைவன் கவிழ்த்துப் போடுவாராக.
தரியு ஆகிய நானே இதைக் கட்டளையிட்டிருக்கிறேன். இது கவனத்துடன் செயல்படுத்தப்படட்டும்.
ஆலயம் கட்டி முடிக்கப்படுதல்
13 அப்பொழுது ஐபிராத்து மறுகரைக்கு ஆளுநனாக இருந்த தக்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களோடுகூட இருந்தவர்களும் தரியு அரசனின் உத்தரவின் நிமித்தம் அதைக் கவனத்துடன் செயல்படுத்தினார்கள். 14 அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள். 15 தரியு அரசனுடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில் ஆதார் மாதம் மூன்றாம் நாளில் ஆலயம் கட்டிமுடிந்தது.
16 அதன்பின்பு இஸ்ரயேல் மக்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களான மீதியானவர்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 17 இறைவனின் ஆலய அர்ப்பணத்திற்கு அவர்கள் நூறு காளைகள், இருநூறு ஆட்டுக்கடாக்கள், நானூறு ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றைப் பலியாகச் செலுத்தினார்கள். எல்லா இஸ்ரயேலரினதும் பாவநிவாரணக் காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒன்றாக அவற்றைச் செலுத்தினார்கள். 18 பின்பு மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி எருசலேமிலுள்ள இறைவனின் பணிக்காக ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவின்படியும் லேவியர்களை அவர்களுடைய குழுக்களின்படியும் நியமித்தார்கள்.
பஸ்கா
19 அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். 20 ஆசாரியரும், லேவியர்களும் ஒன்றாக சேர்ந்து தங்களைச் சுத்திகரித்து எல்லோரும் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருந்தனர். லேவியர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த அனைவருக்காகவும், தங்கள் சகோதரர்களான ஆசாரியருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். 21 நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த இஸ்ரயேலர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி, மற்ற அயலவர்களுடைய அசுத்தமான நடைமுறைகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டிருந்த அனைவருடனும் அதைச் சாப்பிட்டார்கள். 22 அவர்கள் ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனின் தேவாலயத்தின் வேலையில் அசீரியா அரசன் அவர்களுக்கு உதவி செய்தான். யெகோவா அசீரிய அரசனின் மனதை மாற்றியதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியால் நிறைத்திருந்தார்.