7
இம்மானுயேலின் அடையாளம்
1 உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவிலே அரசனாய் இருந்தான். அப்பொழுது, சீரிய அரசன் ரேத்சீனும், இஸ்ரயேல் அரசன் ரெமலியாவின் மகன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். ஆனால் அதை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
2 “எப்பிராயீமியருடன்* 7:2 எப்பிராயீமியருடன் என்பது இஸ்ரயேலின் வடபகுதி ராஜ்யம். சீரியா கூட்டணி அமைத்திருக்கிறது” என்ற செய்தி தாவீதின் குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. காற்றினால் காட்டு மரங்கள் அதிர்வது போல், ஆகாஸ் அரசனின் இருதயமும் மக்களின் இருதயமும் பயத்தால் நடுங்கின.
3 அப்பொழுது யெகோவா ஏசாயாவிடம், “நீயும் உன் மகன் செயார் யாசுபும் ஆகாஸ் அரசனைச் சந்திக்கப் போங்கள்; வண்ணான் தோட்டத்திற்குப் போகும் தெருவின் பக்கத்திலுள்ள மேற்குளத்தின் கால்வாய் முடிவில் அவனைக் காண்பீர்கள். 4 அவனிடம் சொல்லவேண்டியதாவது: ‘பயப்படாதே, குழப்பமடையாமல் கவனமாய் இரு. புகையும் கொள்ளிகளாகிய இந்த சீரியருடன் சேர்ந்த ரேத்சீனினதும், ரெமலியாவின் மகன் பெக்காவினதும் கடுங்கோபத்தினிமித்தம் மனந்தளராதே! ஏனெனில் அவர்கள் இருவரும் வெறும் புகையுங்கொள்ளிகளே. 5 சீரியர், எப்பிராயீமுடனும் ரெமலியாவின் மகனுடனும் சேர்ந்து, உனது அழிவுக்காகச் சதி செய்திருக்கிறார்கள். 6 அவர்கள், “நாம் யூதாவின்மேல் படையெடுத்து, அதைப்பிடித்து எங்களுக்கிடையில் பங்கிட்டு, தாபயேலின் மகனை அங்கு அரசனாக நியமிப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள். 7 ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“ ‘அது அப்படி நடக்கப்போவதுமில்லை,
அது நிறைவேறப்போவதுமில்லை.
8 ஏனெனில், தமஸ்கு சீரியாவின் தலைநகராயிருக்கிறது;
ரேத்சீன் மட்டுமே தமஸ்குவில் அரசனாயிருக்கிறான்.
இன்னும் அறுபத்தைந்து வருடங்களில்
எப்பிராயீம் ஒரு மக்கள் கூட்டமாயிராதபடி சிதறடிக்கப்படும்.
9 சமாரியா எப்பிராயீமுக்குத் தலைநகராய் இருக்கிறது,
ரெமலியாவின் மகன் மட்டுமே சமாரியாவில் தலைவனாயிருக்கிறான்.
நீங்களோ உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிராவிட்டால்,
நிலையற்றுப் போவீர்கள்.’ ”
10 மீண்டும் யெகோவா ஆகாஸிடம் பேசி, 11 “இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார்.
12 ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான்.
13 அப்பொழுது ஏசாயா, “தாவீதின் குடும்பத்தாரே, இப்பொழுது கேளுங்கள்! மனிதனின் பொறுமையைச் சோதித்தது போதாதோ? என் இறைவனின் பொறுமையையும் சோதிக்கப் போகிறீர்களோ? 14 ஆகவே யெகோவா தாமே உங்களுக்கு வருங்காலத்தின் அடையாளம் ஒன்றைக் கொடுப்பார்: ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள். 15 தீயதைத் தவிர்த்து நல்லதைத் தெரிந்துகொள்ள அறிவு வரும்போது, அவர் தேனும் தயிரும் சாப்பிடுவார். 16 அந்தப் பிள்ளைக்கு தீயதை விலக்கி, நல்லதைத் தெரிவுசெய்வதற்கு போதிய அறிவு வருமுன்னே, நீ பயப்படுகிற அந்த இரண்டு அரசர்களின் நாடு பாழாக்கிவிடப்படும். 17 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள் முதல் இதுவரை, நீங்கள் காணாத கொடிய காலத்தை, யெகோவா உங்கள்மேலும், உங்கள் மக்கள்மேலும், உங்கள் தகப்பனின் குடும்பத்தார்மேலும் வரப்பண்ணுவார்; அவர் அசீரிய அரசனை உனக்கெதிராக வரப்பண்ணுவார்.”
அசீரியா, யெகோவாவின் கருவி
18 அந்த நாளிலே யெகோவா அதிக தூரத்திலுள்ள எகிப்திய நீரோடைகளிலிருந்து ஈக்களையும், அசீரிய நாட்டிலிருந்து தேனீக்களையும் கூவி அழைப்பார். 19 அவை செங்குத்தான பள்ளத்தாக்குகளிலும், பாறை வெடிப்புகளிலும், முட்புதர்களிலும், நீர்த்தேக்கங்களிலும் வந்து தங்கும். 20 அந்த நாளிலே, யெகோவா, ஐபிராத்து நதிக்கு அக்கரையிலிருக்கும் சவரக்கத்தியான அசீரிய அரசனை கூலிக்கு அமர்த்துவார். அவனைக் கொண்டு அவர் உங்கள் தலையை மொட்டையடித்து, கால்களில் உள்ள மயிரையும் சவரம்செய்து, உங்கள் தாடியையுங்கூட சிரைத்துப் போடுவார். 21 அந்த நாளிலே ஒரு மனிதன் ஒரு இளம் பசுவையும், இரு வெள்ளாடுகளையும் மட்டுமே உயிருடன் வைத்திருக்கக் கூடியதாயிருக்கும். 22 ஆனால் அவையோ மிகுதியாய் பால் கொடுக்கும். அதனால் அவன் உண்பதற்குத் தயிர் இருக்கும். அந்த நாட்டில் மீதமிருக்கின்ற கொஞ்ச மக்கள் தயிரையும் தேனையும் சாப்பிட்டே வாழ்வார்கள். 23 அந்த நாளிலே ஆயிரம் வெள்ளிக்காசு† 7:23 ஆயிரம் சேக்கல் வெள்ளி என்பது 12 கிலோகிராம் மதிப்புள்ள, ஆயிரம் திராட்சைக்கொடிகள் வளர்ந்த ஒவ்வொரு இடத்திலும், முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளுமே வளரும். 24 நாடு முழுவதும் முட்செடிகளாலும், நெருஞ்சில் செடிகளாலும் நிறைந்திருப்பதனால் மனிதர் அங்கு அம்பு வில்லுடனேயே போவார்கள். 25 முன்பு ஒருகாலத்தில் மண்வெட்டியால் கொத்திப் பண்படுத்தப்பட்ட குன்றுகளில் முட்செடிக்கும் நெருஞ்சிலுக்கும் பயந்து, நீங்கள் இனியொருபோதும் அங்கு போகமாட்டீர்கள். அவை மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், செம்மறியாடுகள் நடமாடுவதற்குமான இடங்களாகிவிடும்.