40
எரேமியாவின் விடுதலை
மெய்க்காவலர் தளபதியான நேபுசராதான், ராமாவிலே எரேமியாவை விடுதலையாக்கியபின், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வார்த்தை வந்திருந்தது. பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுபோக இருந்த யூதா எருசலேம் கைதிகளின் மத்தியில், எரேமியா விலங்கிடப்பட்டிருந்ததை நேபுசராதான் கண்டான். காவலர் தளபதி எரேமியாவைக் கண்டபோது அவனிடம், “உன் இறைவனாகிய யெகோவா இந்த இடத்துக்குப் பேராபத்தை நியமித்திருக்கிறார். இப்பொழுது யெகோவா அதைக் கொண்டுவந்து விட்டார். தாம் சொன்னபடியே அவர் அதைச் செய்திருக்கிறார். உன் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் போனதினாலேயே இவை யாவும் நேரிட்டன. ஆனால் இன்று நான் உன்னை உன் கைகளில் இருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறேன். நீ விரும்பினால் என்னோடு பாபிலோனுக்கு வா; நான் உன்னைப் பராமரிப்பேன். உனக்கு விருப்பமில்லாவிட்டால் வரவேண்டாம். முழு நாடுமே உனக்கு முன்பாக இருக்கிறது. நீ உனக்கு விருப்பமான இடத்துக்குப் போ” என்றான். ஆனாலும் எரேமியா புறப்படும் முன் நேபுசராதான் திரும்பவும் அவனிடம், “பாபிலோன் அரசன் யூதாவின் பட்டணங்களுக்குமேல் அதிகாரியாக நியமித்திருக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அங்கே மக்கள் மத்தியில் தங்கியிரு. இல்லையெனில், உனக்கு எங்குபோக விருப்பமோ அங்கே போ” என்று கூறினான்.
அவனுக்கு உணவுப் பொருட்களையும், ஒரு அன்பளிப்பையும் கொடுத்து அனுப்பினான். அப்பொழுது எரேமியா மிஸ்பாவிலிருந்த அகீக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அந்த நாட்டில் மீதியாயிருந்த மக்களின் மத்தியில் தங்கியிருந்தான்.
கெதலியா கொலைசெய்யப்படுதல்
பாபிலோன் அரசன், அகீக்காமின் மகன் கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான். அந்த நாட்டில் மிகவும் ஏழைகளாயிருந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கும் பொறுப்பாக அவனை நியமித்தான். இவர்கள் பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்படாதிருந்தார்கள். இதை வெளி இடங்களில் இன்னமும் இருந்த இராணுவ அதிகாரிகளும், அவர்கள் மனிதரும் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது நெத்தனியாவின் மகன் இஸ்மயேல், கரேயாவின் மகன்கள் யோகனான், யோனத்தான்; தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனின் மகன் யெசனியாவும், அவர்களைச் சேர்ந்த மனிதரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் வந்தார்கள். சாப்பானின் பேரனும் அகீக்காமின் மகனுமான கெதலியா, அவர்களுக்கும் அவர்களுடைய மனிதருக்கும் ஆணையிட்டு, சொன்னதாவது: “நீங்கள் பாபிலோனியருக்கு பணிசெய்ய பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும். 10 எங்களிடம் வந்திருக்கும் பாபிலோனியர் முன்பாக, உங்கள் பிரதிநிதியாக நான் மிஸ்பாவில் இருப்பேன். நீங்களோ திரும்பவும் கைப்பற்றியிருக்கிற பட்டணங்களில் குடியிருந்து, திராட்சைப் பழங்களை அறுவடை செய்து, கோடைகால பழங்களையும், எண்ணெயையும் பாத்திரங்களில் சேர்த்துவையுங்கள்” என்று கூறினான்.
11 பாபிலோன் அரசன் யூதாவில் ஒரு சிலரை மீதியாக வைத்து, சாப்பானின் மகனான அகீக்காமின் மகன் கெதலியாவை அவர்களுக்கு ஆளுநராக நியமித்திருக்கிறான் என்பதை, மோவாப்பிலும், அம்மோனிலும், ஏதோமிலும் மற்ற எல்லா நாடுகளிலும் இருந்த யூதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டார்கள். 12 அப்பொழுது அனைவரும் தாங்கள் சிதறடிக்கப்பட்ட எல்லா நாடுகளிலிருந்தும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் யூதா நாட்டிற்குத் திரும்பி வந்தார்கள். அங்கே அவர்கள் திராட்சரசத்தைச் சேகரித்து, கோடைகால பழங்களையும் அதிகமாகச் சேர்த்து அறுவடை செய்தார்கள்.
13 கரேயாவின் மகன் யோகனானும், இன்னும் திறந்த வெளியான இடங்களில் இருந்த எல்லா இராணுவ அதிகாரிகளும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்தார்கள். 14 அவர்கள் அவனிடம், “அம்மோனியரின் அரசனான பாலிஸ் என்பவன் உம்மைக் கொல்லும்படி, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பியிருக்கிறது உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். ஆனால் அகீக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை.
15 அப்பொழுது கரேயாவின் மகன் யோகனான், மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் இரகசியமாக, “நான் போய் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொன்றுபோட அனுமதியும். ஒருவரும் அதை அறியமாட்டார்கள். ஏன் அவன் உம்மைக் கொன்று, உம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் எல்லா யூதரும் சிதறடிக்கப்படவும், யூதாவில் மீதியாய் இருக்கும் மக்கள் அழிந்துபோகவும் செய்யவேண்டும்” என்று கேட்டான்.
16 ஆனால் அகீக்காமின் மகன் கெதலியா கரேயாவின் மகன் யோகனானிடம், “நீ இப்படியான ஒரு செயலைச் செய்யவேண்டாம். ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ சொல்வது உண்மையல்ல” என்றான்.