12
முறியடிக்கப்பட்ட அரசர்களின் பெயர்ப் பட்டியல்
1 இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்ட நாட்டின் அரசர்கள் இவர்களே: யோர்தானுக்குக் கிழக்கே, அர்னோன் கணவாய் தொடங்கி, அரபாவின் கிழக்குப்பகுதி உட்பட எர்மோன் மலைவரையுள்ள அரசர்களுடைய நிலப்பகுதியை இஸ்ரயேலர் கைப்பற்றினர்.
2 எமோரிய அரசன் சீகோன் எஸ்போனில் ஆட்சிசெய்தான்.
அவனுடைய ஆட்சி அர்னோன் கணவாயின் ஓரத்தில் உள்ள அரோயேர் தொடங்கி, அர்னோன் கணவாயின் நடுப்பகுதி வழியாக யாப்போக் ஆறுவரை இருந்தது. யாப்போக் ஆறு அம்மோனியரின் எல்லையாயிருந்தது. இது கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.
3 அதோடு கிழக்கு அரபாவையும் இவனே ஆட்சிசெய்தான். அந்த நாடு கலிலேயாக்கடலிலிருந்து உப்புக்கடல்வரை போய் பெத்யெசிமோத் பட்டணம் வரையும் இருந்தது. பின்பு அது தெற்கே பிஸ்கா மலைச்சரிவுகளையும் உள்ளடக்கியதாயிருந்தது.
4 பாசானின் அரசனாகிய ஓகு ஆட்சி செய்த பகுதியையும் இஸ்ரயேலர் கைப்பற்றினர். அவன் அஸ்தரோத், எத்ரே ஆகிய நிலப்பகுதி எல்லைகளை ஆட்சி செய்த ரெப்பாயீமியரைச் சேர்ந்த கடைசி அரசர்களில் ஒருவன்.
5 அவன் எர்மோன் மலைநாடு, சல்கா பிரதேசம், மற்றும் பாசான் நாடு முழுவதையும் ஆட்சிசெய்தான். கேசூரியர், மாகாத்தியர் ஆகியோரின் பிரதேசங்களை எல்லையாகக்கொண்ட இடங்களையும் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியதாயிருந்தது. தெற்கே எஸ்போனின் அரசனாகிய சீகோனின் எல்லைவரை இருந்தது. சீகோன் எஸ்போனின் அரசனாயிருந்தான்.
6 யெகோவாவின் அடியானாகிய மோசேயும் இஸ்ரயேலரும் இவ்விரு அரசர்களையும் வெற்றிகொண்டிருந்தார்கள். அத்துடன் யெகோவாவின் அடியானாகிய மோசே, கைப்பற்றப்பட்ட அவர்களுடைய நாட்டை இஸ்ரயேலரின் கோத்திரத்தாராகிய ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோருக்குச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான்.
7 யோர்தானுக்கு மேற்கேயுள்ள பகுதியில் யோசுவாவும் இஸ்ரயேலரும் வெற்றிகொண்ட நாட்டின் அரசர்களான இவர்கள் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காத் முதல் சேயீரை நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலைவரையுள்ள பகுதியில் ஆட்சிசெய்தார்கள். இவர்களது நாடுகளை யோசுவா கைப்பற்றி, இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்கு ஏற்ப அவற்றைப் பிரித்து சொத்துரிமை நாடாக ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் கொடுத்தான். 8 அப்பகுதிகள் நடுவிலுள்ள மலை நாடுகள், மேற்கு மலையடிவாரப்பகுதிகள், அரபா, மலைச்சரிவுகள், யூதாவின் வறண்ட நிலம், நெகேவ் வனாந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அவை முன்னர் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களது நாடுகளாயிருந்தன.
இவர்களே யோசுவா வெற்றிகொண்ட அரசர்கள்:
9 எரிகோவின் அரசன் ஒருவன்,
பெத்தேலுக்கு அருகேயிருந்த ஆயியின் அரசன் ஒருவன்,
10 எருசலேமின் அரசன் ஒருவன்,
எப்ரோனின் அரசன் ஒருவன்,
11 யர்மூத்தின் அரசன் ஒருவன்,
லாகீசின் அரசன் ஒருவன்,
12 எக்லோனின் அரசன் ஒருவன்,
கேசேரின் அரசன் ஒருவன்,
13 தெபீரின் அரசன் ஒருவன்,
கெதேரின் அரசன் ஒருவன்,
14 ஓர்மாவின் அரசன் ஒருவன்,
ஆராதின் அரசன் ஒருவன்,
15 லிப்னாவின் அரசன் ஒருவன்,
அதுல்லாமின் அரசன் ஒருவன்,
16 மக்கெதாவின் அரசன் ஒருவன்,
பெத்தேலின் அரசன் ஒருவன்,
17 தப்புவாவின் அரசன் ஒருவன்,
எப்பேரின் அரசன் ஒருவன்
18 ஆப்பெக்கின் அரசன் ஒருவன்,
லசரோனின் அரசன் ஒருவன்,
19 மாதோனின் அரசன் ஒருவன்,
ஆத்சோரின் அரசன் ஒருவன்,
20 சிம்ரோன் மோரோனின் அரசன் ஒருவன்,
அக்சாபின் அரசன் ஒருவன்,
21 தானாகின் அரசன் ஒருவன்,
மெகிதோவின் அரசன் ஒருவன்,
22 கேதேசின் அரசன் ஒருவன்,
கர்மேலிலுள்ள யொக்னியாமின் அரசன் ஒருவன்,
23 நாபோத்தோரிலுள்ள தோரின் அரசன் ஒருவன்,
கில்காலில் உள்ள கோயிமின் அரசன் ஒருவன்,
24 திர்சாவின் அரசன் ஒருவன்.
இவ்வாறாக, மொத்தம் முப்பத்தொரு அரசர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.