12
பேறுகாலத்தின் பின் சுத்திகரிப்பு
1 யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு பெண் கர்ப்பவதியாகி ஒரு ஆண்குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களில் அசுத்தமாயிருப்பதுபோல், அவள் சம்பிரதாய முறைப்படி ஏழுநாட்களுக்கு அசுத்தமாய் இருப்பாள். 3 எட்டாம் நாளிலோ, அந்த ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். 4 இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை அவள் முப்பத்துமூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை அவள் பரிசுத்தமான எந்தப் பொருளையும் தொடவும், பரிசுத்த இடத்திற்குப் போகவும் கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களின்போது அசுத்தமாயிருப்பதுபோல் இரண்டு வாரங்களுக்கு அசுத்தமாயிருப்பாள். அதன்பின் இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை, அறுபத்தாறு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.
6 “ ‘அவளுடைய மகனுக்கான அல்லது மகளுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தவுடன், சபைக்கூடார வாசலில் இருக்கும் ஆசாரியனிடம் அவள் ஒரு வயதுடைய ஒரு செம்மறியாட்டுக் கடாக்குட்டியைத் தகன காணிக்கையாகவும், ஒரு புறாக்குஞ்சை அல்லது ஒரு மாடப்புறாவை பாவநிவாரண காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். 7 ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்ய, அவற்றை யெகோவா முன்னிலையில் பலியாகச் செலுத்தவேண்டும். அப்பொழுது அவள் சம்பிரதாய முறைப்படி தன் இரத்தப்போக்கிலிருந்து சுத்தமாயிருப்பாள்.
“ ‘ஆண் குழந்தையையோ, பெண் குழந்தையையோ பெறுகிற பெண்ணைப் பற்றிய விதிமுறைகளாவன: 8 ஒரு செம்மறியாட்டுக் குட்டியைச் செலுத்த வசதியற்றவளானால், இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைக் கொண்டுவரலாம். அவற்றில் ஒன்றைத் தகன காணிக்கையாகவும், இன்னொன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாக ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவள் சுத்தமாவாள்.’ ”