21
ஆசாரியருக்கான சட்டங்கள்
யெகோவா மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆசாரியனானவன் தன் மக்களில் சாகும் யாருக்காகவும் சம்பிரதாயப்படி தன்னை அசுத்தமாக்கிக்கொள்ளக் கூடாது. நெருங்கிய உறவினரான தன் தகப்பன், தாய், தன் மகன், மகள், தன் சகோதரன் ஆகியோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்தலாம். அல்லது கணவன் இல்லாத காரணத்தால் தன்னில் தங்கி வாழ்கின்ற, திருமணமாகாத தனது சகோதரிக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ளலாம். திருமணத்தின்மூலம் தனக்கு உறவினரானோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
“ ‘ஆசாரியர்கள் தங்கள் தலைகளை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடிகளின் ஓரத்தைக் கத்தரிக்கவோ, தங்கள் உடல்களைக் கீறிக்கொள்ளவோ கூடாது.* 21:5 லேவி. 19:27-28 அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். தங்களுடைய இறைவனின் பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனின் உணவை நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறபடியால், அவர்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
“ ‘அவர்கள் வேசித்தனத்தால் கறைப்பட்ட பெண்களையோ அல்லது தங்கள் கணவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர்களையோ திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் ஆசாரியர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமானவர்கள். ஆசாரியர்கள் உங்கள் இறைவனின் உணவைப் பலியாகச் செலுத்துகிறபடியால், அவர்களைப் பரிசுத்தமானவர்களாக மதியுங்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறபடியால், அவர்களையும் பரிசுத்தமானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.
“ ‘ஒரு ஆசாரியனின் மகள் வேசியாகி அதினால் தன்னைக் கறைப்படுத்தினால், அவள் தன் தகப்பனை அவமானப்படுத்துகிறாள். அவள் நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.
10 “ ‘தன் சகோதரர்கள் மத்தியில் தன் தலையின்மேல் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டவனும், ஆசாரியனுக்கான உடைகளை அணிவதற்கு நியமிக்கப்பட்டவனுமான தலைமை ஆசாரியன் தன் தலைமயிரைக் குலைக்கவோ, தன் உடைகளைக் கிழிக்கவோ கூடாது. 11 அவன் ஒரு இறந்த உடல் கிடக்கும் இடத்திற்குப் போகக்கூடாது. அவனுடைய தகப்பனோ, தாயோ இறந்தாலும் அவன் தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது. 12 அவன் தன் இறைவனின் பரிசுத்த இடத்தைவிட்டுப் புறப்படவோ, அதைத் தூய்மைக்கேடாக்கவோ கூடாது. ஏனெனில் அவன் தன் இறைவனின் அபிஷேக எண்ணெயால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறான். நானே யெகோவா.
13 “ ‘தலைமை ஆசாரியன் திருமணம் செய்யும் பெண், ஒரு கன்னிகையாகவே இருக்கவேண்டும். 14 அவன் ஒரு விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ, வேசித்தனத்தினால் கறைப்பட்ட ஒரு பெண்ணையோ திருமணம் செய்யக்கூடாது. தன் சொந்த மக்கள் மத்தியில் உள்ள கன்னிகையை மட்டுமே திருமணம் செய்யவேண்டும். 15 இவ்வாறாக அவன் தன் மக்கள் மத்தியில் தன் சந்ததிகளை மாசுப்படுத்தாமல் இருக்கவேண்டும். அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே’ ” என்றார்.
16 யெகோவா மோசேயிடம், 17 “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் அங்கவீனம் உள்ள எவனும் தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படிக்கு அருகில் வரக்கூடாது. 18 எத்தகைய அங்கவீனமுள்ளவனும் சமீபத்தில் வரக்கூடாது. குருடன், முடவன், உருவம் சிதைந்தவன், உருவக் குறைபாடுள்ளவன், 19 கை அல்லது கால் முடமானவன், 20 கூன்முதுகன், வளர்ச்சி குன்றியவன், கண்ணில் குறைபாடுள்ளவன், சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளவன், விதைகள் சேதப்பட்டவன் ஆகிய எவனுமே அவ்வாறு வரக்கூடாது. 21 ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளில் ஊனமுடைய யாராவது, நெருப்பினால் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்த சமீபத்தில் வரக்கூடாது. அவன் ஊனமுள்ளவனாகையால், தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படி சமீபமாய் வரக்கூடாது. 22 அவன் தன் இறைவனின் மகா பரிசுத்தமான உணவையும், மற்ற பரிசுத்தமான உணவையும் சாப்பிடலாம். 23 ஆனாலும் அவன் தன் அங்கவீனத்தினிமித்தம் திரைக்குச் சமீபமாய்ப் போகவோ, பலிபீடத்தை அணுகவோ கூடாது. இவ்வாறாக என் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கக் கூடாது. ஆசாரியர்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா நானே’ ” என்றார்.
24 மோசே இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் அனைவருக்கும் சொன்னான்.

*21:5 21:5 லேவி. 19:27-28