10
இயேசு சீடர்களை அனுப்புதல்
இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை* 10:1 சில கையெழுத்துப் பிரதிகளில் எழுபதுபேர் என்றுள்ளது (வசனம் 17). நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார். இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம்.
“நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும். நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம்.
“நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள். அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10 ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம், 11 ‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 12 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
13 “கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், 10:13 இவைகள் கலிலேயா ஏரியை சுற்றியுள்ள பட்டணங்கள் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். 14 ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும். 15 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய்.
16 “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார்.
17 அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
18 இயேசு அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப்போல் விழுகிறதை, நான் கண்டேன். 19 பாம்புகளையும், தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும், நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. 20 ஆனால், தீய ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.
21 அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
22 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை இன்னாரென்று அறியான். மகனைத் தவிர வேறொருவனும் பிதா யாரென்றும் அறியான். யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்” என்றார்.
23 பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப்பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. 24 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”
நல்ல சமாரியன் உவமை
25 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
26 அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.
27 அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’ 10:27 உபா. 6:5; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’§ 10:27 லேவி. 19:18” எனப் பதிலளித்தான்.
28 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார்.
29 ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான்.
30 அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். 31 ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். 32 அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். 33 ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். 34 அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். 35 மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.”
36 இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
37 அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான்.
அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.
மார்த்தாள், மரியாள்
38 பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள். 39 அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். 40 ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.
41 அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய். 42 ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

*10:1 10:1 சில கையெழுத்துப் பிரதிகளில் எழுபதுபேர் என்றுள்ளது (வசனம் 17).

10:13 10:13 இவைகள் கலிலேயா ஏரியை சுற்றியுள்ள பட்டணங்கள்

10:27 10:27 உபா. 6:5

§10:27 10:27 லேவி. 19:18