அத்தியாயம் 10
ஞானமுள்ளவனும், ஞானமற்றவனும்
1 செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும். 2 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். 3 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான். 4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம்* 10:4 நீ ஒப்புக்கொடுக்கும்போது பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். 5 நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே. 6 மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 7 வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன். 8 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். 9 கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான். 10 இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம். 11 தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன். 12 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். 13 அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும். 14 மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? 15 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும். 16 ராஜா சிறுபிள்ளையுமாக† 10:16 வேலைக்காரனாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ, 17 ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது. 18 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும். 19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். 20 ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.