அத்தியாயம் 6
பிள்ளைகளும், பெற்றோரும்
1 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. 2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், 3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது. 4 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.
வேலைக்காரர்களும், எஜமான்களும்
5 வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து; 6 மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள். 7 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து, 8 மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள். 9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
கிறிஸ்துவின் படைவீரர்களும், ஆயுதங்களும்
10 கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். 12 ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14 சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்; 15 சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; 16 சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். 17 இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18 எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். 19 நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும், 20 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
இறுதி வாழ்த்துரை
21 அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். 22 நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன். 23 பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.