அத்தியாயம் 9
சிலைகள் அழிக்கப்படுதல்
1 பின்பு தேவன் என்னுடைய காதுகள் கேட்க மகா சத்தமாக; எருசலேம் நகரத்தின் விசாரிப்புக்காரர்கள் அழிக்கும் ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டுவரவேண்டும் என்று சொன்னார். 2 அப்பொழுது இதோ, ஆறு ஆண்கள், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே நுழைந்து, வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றார்கள். 3 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டு, 4 யெகோவா அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் சுற்றிவந்து, அதற்குள்ளே செய்யப்படுகிற எல்லா அருவருப்புகளுக்காக பெருமூச்சுவிட்டு அழுகிற மனிதர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 5 பின்பு அவர் என்னுடைய காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் சுற்றிவந்து வெட்டுங்கள்; உங்களுடைய கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், 6 முதியோர்களையும், வாலிபர்களையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் தொடாமல் இருங்கள், என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே தொடங்குங்கள் என்று என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்திற்கு முன்னே இருந்த மூப்பர்களிடத்தில் துவங்கினார்கள். 7 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, முற்றங்களைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் எருசலேம் நகரத்தில் போய் வெட்டினார்கள். 8 அவர்கள் வெட்டிக்கொண்டுபோகும்போது நான் மட்டும் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது கடுங்கோபத்தை ஊற்றும்போது இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன். 9 அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய மக்களின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; யெகோவா தேசத்தைக் கைவிட்டார்; யெகோவா பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். 10 ஆகையால் என்னுடைய கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் இறங்கச்செய்வேன் என்றார். 11 இதோ, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.