அத்தியாயம் 6
மணவாளியின் தோழிகள்
உன் நேசர் எங்கே போனார்?
பெண்களில் அழகுமிகுந்தவளே!
உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்?
உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
மணவாளி தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும்,
என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்;
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
சூலமித்தியாளின் அழகு
மணவாளன்
என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும்,
எருசலேமைப்போல் வடிவமும்,
கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு,
அவைகள் என்னை வென்றது;
உன் கருமையான கூந்தல்
கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,
ஒன்றாகிலும் மலடாக இல்லாமல்
இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
ராணிகள் அறுபதுபேரும்,
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு;
கன்னியர்களுக்குத் தொகையில்லை.
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை;
அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்;
இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்;
ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும்,
கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக,
சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
11 பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும்,
திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும்,
வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 நினைக்காததற்குமுன்னே
என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது.
மணவாளியின் தோழிகள்
13 திரும்பிவா, திரும்பிவா,
சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு,
திரும்பிவா, திரும்பிவா.
மணவாளி
சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.