20
மக்கெதோனியா, கிரேக்கம் வழியாக பவுலின் பயணம்
கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடரை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தினான். பின் அவர்களிடம் விடைபெற்று, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான். அவன் அந்தப் பகுதிகள் வழியாகப்போய், மக்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான். அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஏனெனில், அவன் கப்பல் ஏறி சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில், யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான். அவனுடனேகூட பெரோயா பட்டணத்தைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்துஸ், தெர்பையைச் சேர்ந்த காயு, தீமோத்தேயு, ஆசியா பகுதியைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீம் ஆகியோரும் சென்றார்கள். இவர்கள் எங்களுக்கு முன்பாகப் போய் துரோவா பட்டணத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் நாங்களோ, புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குப் பின், பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் மூலம் புறப்பட்டு, ஐந்து நாட்களுக்குப்பின் துரோவா பட்டணத்திற்கு வந்து, அவர்களோடு சேர்ந்துகொண்டோம். அங்கே நாங்கள் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.
ஐத்திகு உயிர் பெறுதல்
வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே, பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த நித்திரை மயக்கத்திலிருந்ததால், மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான். 10 பவுல் கீழே இறங்கிப்போய், அந்த வாலிபன்மீது விழுந்து, தனது கைகளினால் அவனை அணைத்துக்கொண்டான். அவன் அங்கே நின்றவர்களிடம், “பயப்படவேண்டாம். அவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி, அவனை அவர்களிடம் ஒப்படைத்தான். 11 பின்பு அவன் மேல்மாடிக்குத் திரும்பவும் போய், விசுவாசிகளுடன் அப்பம் பிட்டு சாப்பிட்டான். அவன் விடியும்வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனான். 12 அந்த வாலிபனை மக்கள் உயிருடன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது.
எபேசுவின் சபைத்தலைவர்களுக்கு பிரியாவிடை
13 பவுல் கால்நடையாய் ஆசோ பட்டணத்திற்குப்போக ஏற்கெனவே தீர்மானித்திருந்ததால், நாங்கள் அவனுக்கு முன்னே கப்பலேறி, ஆசோ பட்டணத்திற்குப் போனோம். அங்கே பவுலை எங்களுடனே கப்பலில் ஏற்றிக்கொள்வது எங்கள் நோக்கமாயிருந்தது. 14 அவன் எங்களை ஆசோ பட்டணத்தில் சந்தித்தபோது, அவனையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்திற்குப் போனோம். 15 மறுநாள் நாங்கள் கப்பலில் கீயு என்று அழைக்கப்படும் தீவிற்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்கடுத்த நாள் சாமு தீவைக் கடந்து, அதற்கடுத்த நாள் மிலேத்து பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். 16 பவுல் பெந்தெகொஸ்தே நாளிலே, எருசலேமைச் சென்றடைய வேண்டுமென்று ஆவலுடையவனாய் இருந்தான். ஆதலால் அவன் ஆசியா பகுதியிலே காலத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக்கொள்ள விரும்பி, எபேசுவைக் கடந்துபோகத் தீர்மானித்தான்.
17 பவுல் மிலேத்து பட்டணத்திலிருந்து, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் தலைவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளனுப்பினான். 18 அவர்கள் அவனிடம் வந்தபோது, அவன் அவர்களைப் பார்த்து: “நான் ஆசியா பகுதிக்கு வந்தநாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும், எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 19 நான் அதிகத் தாழ்மையோடும் கண்ணீரோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன். 20 உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக்கூடிய எதையும் உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளியரங்கமாகவும், வீடுகள்தோறும் உங்களுக்குப் போதித்தேன். 21 யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், நம் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்றும் நான் அறிவித்தேன்.
22 “இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் கட்டுண்டவனாக நான் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. 23 நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். 24 ஆனால் என் வாழ்வு எனக்கு ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
25 “உங்கள் மத்தியில் நான் இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட யாவரும் என்னை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 26 ஆகவே உங்களில் யாராவது அழிந்தால், அந்த இரத்தப்பழி என்மேல் சுமராது என்று, நான் உங்களுக்கு இன்று உறுதியாய் அறிவிக்கிறேன். 27 ஏனெனில், இறைவனுடைய முழுத் சித்தத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. 28 உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார். 29 நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். 30 உங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும்கூட எழும்பி, தங்கள் பக்கமாய் சீடரை இழுத்துக் கொள்வதற்கு, உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். 31 எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
32 “இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. 33 யாருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்படவில்லை. 34 என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்த இவை எல்லாவற்றிலும், இவ்விதம் கஷ்டப்பட்டு வேலைசெய்தே, நாம் நலிவுற்றோர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று, நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே அதிக ஆசீர்வாதம்’ என்று கர்த்தராகிய இயேசு தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன்” என்றான்.
36 பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான். 37 அவர்கள் அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள். 38 “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.