2
கவனமாய் பற்றிக்கொள்ள எச்சரிக்கை
எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம். இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது. அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள். இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
இயேசு பூரண மானிடர்
வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில்,
“இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?
நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து* 2:7 அல்லது அவர்களை சிறிதுகாலம்,
அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” 2:8 சங். 8:2-6
இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை. ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
10 அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. 11 பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார். 12 இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது,
“நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்;
திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.” 2:12 சங். 22:22
13 மேலும்,
“நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன்,§ 2:13 ஏசா. 8:17
இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்”* 2:13 ஏசா. 8:18
என்றும் கூறியுள்ளார்.
14 பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், 15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார். 16 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. 17 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார். 18 இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.

*2:7 2:7 அல்லது அவர்களை சிறிதுகாலம்

2:8 2:8 சங். 8:2-6

2:12 2:12 சங். 22:22

§2:13 2:13 ஏசா. 8:17

*2:13 2:13 ஏசா. 8:18