21
இயேசு எருசலேமுக்கு அரசராக வருகிறார்
அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே ஊருக்கு வந்தபோது, இயேசு இரண்டு சீடர்களை அனுப்பிச் சொன்னதாவது: “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை கர்த்தருக்கு தேவை’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பிவிடுவான்” என்றார்.
இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது:
“சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்:
இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார்,
தாழ்மையுள்ள அவர் கழுதையின்மேலும்,
கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் அமர்ந்து வருகிறார்.”* 21:5 சக. 9:9
சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு அறிவுறுத்தியபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்தார்கள். அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டதும், இயேசு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார். திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். அவருக்கு முன்னும், பின்னுமாகச் சென்ற மக்கள் கூட்டம்:
“தாவீதின் மகனுக்கு ஓசன்னா 21:9 சங். 118:25,26!”
 
“கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
 
“உன்னதத்தில் ஓசன்னா!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
10 இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள்.
11 மக்கள் கூட்டம் அதற்குப் பதிலாக, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” என்றார்கள்.
ஆலயத்தில் இயேசு
12 இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களுமாகிய எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயம் மாற்றுவோரின் மேஜைகளையும், புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். 13 இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது 21:13 ஏசா. 56:7. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்”§ 21:13 எரே. 7:11 என்றார்.
14 பார்வையற்றோரும் முடவரும் ஆலயத்தில் இயேசுவிடம் வந்தார்கள். அவர் அவர்களை குணமாக்கினார். 15 அவர் செய்த இந்த புதுமையான காரியங்களையும், சிறுபிள்ளைகள் ஆலய முற்றத்திற்குள் நின்று, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆர்ப்பரிப்பதையும், தலைமை ஆசாரியரும் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் கோபமடைந்தார்கள்.
16 அவர்கள் இயேசுவிடம், “இந்தப் பிள்ளைகள் சொல்வது கேட்கிறதா?” என்றார்கள்.
இயேசு அதற்கு பதிலாக, “ஆம்,
“ ‘சிறுபிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்,’* 21:16 சங். 8:2 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.
என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார்.
17 அதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவு தங்கினார்.
பட்டுப்போன அத்திமரம்
18 மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார். 19 வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று.
20 சீடர்கள் இதைக்கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்திமரம் எப்படிப் பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள்.
21 இயேசு அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்திமரத்துக்குச் செய்யப்பட்டதுபோல உங்களாலும் செய்யமுடியும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொன்னால், அதுவும் அப்படியே நடக்கும். 22 நீங்கள் விசுவாசித்தால், மன்றாட்டில் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார்.
இயேசுவின் அதிகாரத்தைக் குறித்த கேள்வி
23 இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் யூதரின் தலைவர்களும் அவரிடத்தில் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக் கொண்டு, நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.
24 அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார். 25 “யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார்.
அவர்கள் இதைக்குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார். 26 மனிதரிடமிருந்து என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.”
27 எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.
பின்பு இயேசு அவர்களிடம், “அப்படியானால், இந்தக் காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
இரண்டு மகன்களின் உவமை
28 “பின்பு இயேசு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்’ என்றான்.
29 “அதற்கு அவன், ‘நான் போகமாட்டேன்’ என்றான், ஆனால் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு வேலைசெய்யப்போனான்.
30 “பின்பு அந்தத் தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகிறேன் என்றான்.’ ஆனால் அவன் போகவில்லை.
31 “இவ்விருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தான்?” என்று கேட்டார்.
“மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் செல்வார்கள். 32 ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள். அதைக்கண்ட பின்பும், நீங்கள் மனந்திரும்பி அவனை விசுவாசிக்கவில்லை.
குத்தகைக்காரன் உவமை
33 “மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலத்தின் உரிமையாளன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும் ஒரு காவல் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான். 34 அறுவடைக்காலம் வந்தபோது, அவன் தனது வேலைக்காரர்களிடம் தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி குத்தகைக்காரரிடம் அனுப்பினான்.
35 “குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலைசெய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள். 36 பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பினவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, அவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள். 37 அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான்.
38 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளன். வாருங்கள், இவனைக் கொலைசெய்து, இவனுடைய உரிமைச்சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.
40 “ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளன் வரும்போது, அந்த குத்தகைக்காரரை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார்.
41 அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களை கொடுமையாக அழித்துப் போட்டு திராட்சைத் தோட்டத்தையும் அறுவடைக்காலத்தில் விளைச்சலில் தனக்குரிய பங்கைத் தனக்குக் கொடுக்கக்கூடிய, வேறு குத்தகைக்காரருக்குக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள்.
42 இயேசு அவர்களிடம்,
“ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
கர்த்தரே இதைச் செய்தார்.
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’
என்ற நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 21:42 சங். 118:22,23
43 “ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்படும். அது அதற்கேற்ற கனிகொடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படும். 44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
45 தலைமை ஆசாரியர்களும், பரிசேயரும் இயேசுவின் உவமையைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகிறார் என்று அறிந்துகொண்டார்கள். 46 எனவே, அவர்கள் அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஆனால் மக்கள் அவரை ஒரு இறைவாக்கினர் என்று எண்ணியிருந்தபடியால், அவர்கள் அந்த மக்கள் கூட்டத்திற்குப் பயந்தார்கள்.

*21:5 21:5 சக. 9:9

21:9 21:9 சங். 118:25,26

21:13 21:13 ஏசா. 56:7

§21:13 21:13 எரே. 7:11

*21:16 21:16 சங். 8:2 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.

21:42 21:42 சங். 118:22,23