எஸ்றா. 2. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும் செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்: பாரோஷின் சந்ததி 2,172 பேர், செபத்தியாவின் சந்ததி 372 பேர், ஆராகின் சந்ததி 775 பேர், யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர், ஏலாமின் சந்ததி 1,254 பேர், சத்தூவின் சந்ததி 945 பேர், சக்காயின் சந்ததி 760 பேர், பானியின் சந்ததி 642 பேர், பெபாயின் சந்ததி 623 பேர், அஸ்காதின் சந்ததி 1,222 பேர், அதோனிகாமின் சந்ததி 666 பேர், பிக்வாயின் சந்ததி 2,056 பேர், ஆதீனின் சந்ததி 454 பேர், எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர், பேஸாயின் சந்ததி 323 பேர், யோராகின் சந்ததி 112 பேர், ஆசூமின் சந்ததி 223 பேர், கிபாரின் சந்ததி 95 பேர். பெத்லெகேமின் மனிதர் 123 பேர், நெத்தோபாவின் மனிதர் 56 பேர், ஆனதோத்தின் மனிதர் 128 பேர், அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர், கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர், ராமா, கேபாவின் மனிதர் 621 பேர், மிக்மாசின் மனிதர் 122 பேர், பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர், நேபோவின் மனிதர் 52 பேர், மக்பீசின் மனிதர் 156 பேர், மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர், ஆரீமின் மனிதர் 320 பேர், லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர், எரிகோவின் மனிதர் 345 பேர், செனாகாவின் மனிதர் 3,630 பேர். ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர், இம்மேரின் சந்ததி 1,052 பேர், பஸ்கூரின் சந்ததி 1,247 பேர், ஆரீமின் சந்ததி 1,017 பேர். லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர். பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர். ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர். திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத், கேரோசு, சீயாகா, பாதோன், லெபானா, அகாபா, அக்கூப், ஆகாப், சல்மாயி, ஆனான், கித்தேல், காகார், ரயாயா, ரேசீன், நெக்கோதா, காசாம், ஊசா, பாசெயா, பேசாய், அஸ்னா, மெயூனீம், நெபுசீம், பக்பூக், அகுபா, அர்கூர், பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா, பர்கோஸ், சிசெரா, தேமா, நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள். திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா, யாலா, தர்கோன், கித்தேல், செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள். ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர். பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை. அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர். ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான். இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான். எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர். அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன. அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள். ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.