யோபு. 4. அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால், நீ பொறுமையாய் இருப்பாயோ? ஆனால் யாரால்தான் பேசாதிருக்க முடியும்? நீ அநேகருக்கு புத்தி சொல்லி, தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய். தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன; தள்ளாடிய முழங்கால்களை நீ உறுதிபடுத்தியிருக்கிறாய். இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்; அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய். உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும், குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ? குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ? நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ? என இப்பொழுது யோசித்துப்பார். தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள், அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம், ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன. சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும், சிங்கக் குட்டிகளோ சிதறிப்போகும். “இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது, அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது. மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில், பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன. அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது. ஆவி நின்றது, அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது, அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்: ‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ? தன்னைப் படைத்தவரைவிட அதிக தூய்மையாய் இருப்பானோ? இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார், அவர் தன் தூதர்களிலும் குறைகண்டிருக்கிறார். அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு, களிமண் வீட்டில் வாழ்பவர்களும், பூச்சிபோல் நசுக்கப்படுகிறவர்களுமாகிய மனிதரின் குறையை அவர் காணாமலிருப்பாரோ? அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும், கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள். அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு, அவை ஞானமில்லாமல் சாவதில்லையா?’